Saturday, September 12, 2009

படித்ததை பகிரலாமே!




கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வாழ்க்கைநிலை, உணவுமுறை போன்றவற்றில் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாய் முன்னேற்றங்களும் மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது. கல்லையும் கல்லையும் உரசினால் தீப்பொறி வரும் என்பது தொடங்கி கணிப்பொறி மூலம் உலகையே கைக்குள் அடக்க முடிவது வரை இது நிரூபணம்.



இவ்வளர்ச்சியினை மனிதகுல வளர்ச்சியாக நினைக்கத் தோன்றினாலும் இது எல்லோருக்குமான வளர்ச்சியா? என்பதில் தான் சந்தேகம் இருக்கிறது.
நெருப்பை உருவாக்கும் விதத்தை உலகுக்கே கற்பித்த காலமெல்லாம் மலையேறி, தற்போது உருவாகிற எந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களும் எல்லாதரப்பு மக்களுக்கும் சென்றடைவதுமில்லை சொல்லித்தரப்படுவதுமில்லை. முன்பு இல்லாத வியாபார நோக்கமும் சுயநலமும் இன்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அரிசியையும் பருப்புகளையும் சமைக்கப்பயன்படுத்தலாம் என்றும் அரளிவிதையை உண்ணக்கூடாதென்றும் நமக்கு சொல்லிக்கொடுத்தவர்கள் நம்மிடமிருந்து எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.


சமீபகாலங்களில் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளாக கருதப்படுபவை செல்போன்களும் கணிப்பொறியும். இவற்றுள் கணிப்பொறியை கண்ணால் கூட பார்க்காமல் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இருக்கிறார்கள்.


இவையெல்லாம் ஒரு புறமிருக்க, 77% இந்திய மக்களின் ஒரு நாளைய சராசரி வருமானம் வெறும் 20 ரூபாய்தான் (ஆதாரம்: இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்). இந்த இருபது ரூபாயை வைத்துக்கொண்டு அன்றாடம் பிழைப்பு நடத்துவதே மிகக்கடினமாக இருக்கையில், அவர்களின் பிள்ளைகள் கல்வியும் கணிப்பொறியும் பயில்வது எங்ஙனம் சாத்தியம். இதற்கெல்லாம் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பது ஒருபுறம் கேள்வியாய் உதித்தாலும், சமகாலத்தில் வாழும் நாம் இந்த மக்களுக்காக என்ன செய்யப்போகிறோம்? என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது.


வெறும் காகிதத்தை பறக்கவிட்டால் குறிப்பிட்ட தூரம்வரைதான் பறக்கமுடியும் என்றும், அதே காகிதத்தை இரு குச்சிகளோடு குறிப்பிட்ட அளவில் சேர்த்து உருவாகும் பட்டம்(காற்றாடி) பல அடி தூரம் பறக்கும் என்பதை நம் எல்லோருக்கும் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. அதே போன்று நாமும் நமக்கிருக்கிற கணிப்பொறி அறிவினை, பலருக்கும் பயிற்றுவிக்கலாம்.




இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம்கொண்ட சில நண்பர்கள் இணைந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை என்கிற மலைவாழ் மக்கள் வாழக்கூடிய கிராமத்தில் கணிப்பொறி அறிவு மையம் ஒன்றை மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் துவங்கியிருக்கிறோம். தீர்த்தமலை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ளவர்களுக்கு கணிப்பொறி அறிவினை அளிப்பதற்கு துவங்கி இருக்கிறது இந்த அறிவு மையம். இது வரை சுமார் 800 மாணவர்களுக்கு அடிப்படை கணிப்பொறி அறிவினை (Introduction to Computers, MS-Office, Tally, Computer Hardware, C, C++, Java) அளித்திருக்கிறது இந்த மையம்.


கணிப்பொறியை முதன் முதலாய் பார்க்கும் அந்த ஆர்வமும், நாம்கூட இதனை கற்றுக்கொள்ளமுடியுமா என்கிற ஆச்சரியப்பார்வையும், அதில் அவர்கள் காட்டுகிற ஈடுபாடும் எங்களை உற்சாகப்படுத்துகிறது.


நீங்களும் இவர்களுக்காக ஏதேனும் ஒரு வகையில் உதவமுடியுமா என்று பாருங்களேன்!


1. தங்களுடைய கணிப்பொறி அறிவினை அவர்களுக்கு பயிற்றுவிக்கலாம்.
2. எங்களது குழுவில் இணைந்து திட்டமிடலில் கலந்துகொள்ளலாம்.


இவற்றில் ஏதாவது ஒரு வகையில் தாங்கள் உதவ எண்ணினாலோ அல்லது தங்களது கருத்துக்களை தெரிவிக்க நினைத்தாலோ, இங்கே கருத்துரைகளாகவோ (Blog Comments) மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள். (makkal.vaazhvurimai@gmail.com)